மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்கும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் மாத்திரை சாப்பிட மறுப்பு

சம்பளம் வழங்கக்கோரி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் மாத்திரை சாப்பிட மறுப்பு தெரிவித்தனர். ஆலை நிர்வாகத்துடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

Update: 2018-10-11 22:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்கக்கோரியும் கடந்த 1-ந் தேதி முதல் ஆலை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 11-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

இதேபோல் கும்பகோணம் அருகே கோட்டூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்களும் சம்பளம் வழங்கக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண்டங்குடியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சர்க்கரை ஆலை ஊழியர்கள் தியாகராஜன், கந்தசாமி, மனோகரன் ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மருத்துவமனையிலும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள், மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரைகளை சாப்பிட மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். சர்க்கரை ஆலை நிர்வாகம் சம்பளத்தை வழங்கும் வரை மாத்திரை மற்றும் உணவு சாப்பிட போவதில்லை என இவர்கள் கூறினர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். அப்போது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளதால் ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்