பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2018-10-11 23:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெகன் (வயது 38). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது ஜெகன், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நேற்று காலையில் தக்கலை அருகே உள்ள சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உடலுடன் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 14 பேர் வந்தனர். உடலை பார்த்ததும் ஜெகனின் மனைவி சுபி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஜெகனின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், சுரேஷ்ராஜன், திருவிதாங்கோடு வருவாய் ஆய்வாளர் துர்கா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்பு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து ஜெகன் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு அவரது மனைவி சுபியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஜெகனின் உடல் வீட்டின் அருகே உள்ள கல்லறையில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன், கட்சி நிர்வாகி உதவியுடன் ஜெகனின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசினார். அப்போது, அவர் ஜெகனின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறினார். 

மேலும் செய்திகள்