மஞ்சூர் அருகே தங்காட்டில் கரடி தாக்கி பெண் படுகாயம்

மஞ்சூர் அருகே தங்காட்டில் கரடி தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-11 21:45 GMT
மஞ்சூர், 

மஞ்சூர் அருகே உள்ள தங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் என்பவரது மனைவி லீலா (வயது 45), தேயிலை தோட்ட தொழிலாளி. நேற்று காலையில் தங்காடு- மணியட்டி சாலையில் ஓடேரி என்ற பகுதியில் உள்ள ராஜு என்பவரின் தோட்டத்தில் லீலா, வசந்தா தேவி (48), ராணி (35), தெய்வானை (33), புஷ்பவல்லி (31) ஆகியோர் இலை பறித்து கொண்டு இருந்தனர்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென லீலாவின் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். இதனால் லீலாவை விட்டுவிட்டு கரடி தேயிலை செடிகளுக்கு இடையே ஓடி மறைந்தது.

கரடி தாக்கியதில் லீலாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து லீலாவுக்கு தங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குந்தா வனச்சரகர் சரவணன், வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

தங்காடு பகுதியில் குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த நிலையில் ஒரு கரடி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் குட்டியை ஈன்றுள்ளது. எனவே கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்