மதுராந்தகத்தில் லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் பலி போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பலியானார்கள். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-11 22:54 GMT
மதுராந்தகம்,

மதுராந்தகம் பைபாஸ் ஏரிக்கரை வழியாக சென்னை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு கன்டெய்னர் லாரி சென்றது. லாரியை சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த அரவிந்தர்சிங் (வயது 42) ஓட்டினார். கிளனராக சமிர்சிங் இருந்தார். அப்போது திடீரென லாரி பழுதானது. 2 பேரும் லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு பழுது பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற மற்றொரு லாரியை நிறுத்தி உதவி கேட்டனர். அதில் இருந்த டிரைவரான சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மித்ராசிங் தனது லாரியை பழுதான லாரியின் முன் பகுதியில் நிறுத்தினார்.

பின்னர் இருவரும் லாரிகளில் பழுது பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திடீர் என்று பழுதான லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் லாரியை பழுது பார்த்து கொண்டிருந்த டிரைவர்கள் அரவிந்தர்சிங், மித்ராசிங் ஆகியோர் லாரிகளுக்கு இடையில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கிளனர் சமிர்சிங் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்