வேலூரில் இருந்து 8 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

வேலூரில் இருந்து வெளியூர்களுக்கு 8 புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-11 23:37 GMT
வேலூர்,

கடந்த 2017-18-ம் ஆண்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு 13 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தபடியே தொடங்கிவைத்தார். மீதி 5 பஸ்களை வேலூரில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

தற்போது 2-வது கட்டமாக வேலூர் மண்டலத்திற்கு 20 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 12 பஸ்களை முதல்-அமைச்சர் சென்னையில் தொடங்கிவைத்தார். மீதமுள்ள 8 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு கொடியசைத்து புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதில் வேலூரில் இருந்து சென்னைக்கு 2 பஸ்கள் கண்டக்டர் இல்லாமல், இடைநில்லா பஸ்களாக இயக்கப்படுகிறது.

திருப்பத்தூருக்கு 2 பஸ்கள், காஞ்சீபுரத்திற்கு ஒரு பஸ், சென்னையில் இருந்து வேலூர் வழியாக ஒசூருக்கு ஒரு பஸ், சென்னையில் இருந்து சேலத்திற்கு ஒரு பஸ், பேரணாம்பட்டில் இருந்து பெங்களூருக்கு ஒரு பஸ் என 6 பஸ்கள் கண்டக்டர்களுடன் விரைவு பஸ்களாக இயக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் கோ.அரி எம்.பி., முன்னாள் அமைச்சர் விஜய், போக்குவரத்து கழக மண்டல துணை மேலாளர் (வணிகம்) பொன்னுப்பாண்டியன், உதவி மேலாளர் (இயக்கம்) கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்