மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, 2-வது நாளாக தாமிரபரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

மகா புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் தாமிரபரணியில் 2-வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2018-10-12 21:45 GMT
ஸ்ரீவைகுண்டம், 

மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ‘தட்சண கங்கை’ என்று சிறப்பு பெற்ற முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகில் நேற்று 2-வது நாளாக யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடினர். இதேபோன்று ஆழிகுடி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திரளான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர்.

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறையில் நேற்று 2-வது நாளாக யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர். மாலையில் தாமிரபரணிக்கு தீபாராதனை நடந்தது.

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் காலையில் கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, ஞானதீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு அபிஷேகம் நடந்தது. ஆற்றில் மலர் தூவி வழிபட்டனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர்.

இதேபோன்று ஏரல் சுந்தர விநாயகர் கோவில் அருகில் உள்ள ஞானதீர்த்தகட்ட படித்துறை அருகில் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தாமிரபரணிக்கு தீபாராதனை நடந்தது. வாழவல்லான், உமரிக்காடு, மங்களகுறிச்சி உள்ளிட்ட படித்துறைகளிலும் ஆற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திரளான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர். 

மேலும் செய்திகள்