ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது என்று முத்தரசன் கூறினார்.

Update: 2018-10-13 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,


நெடுஞ்சாலை துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அத்துறையின் அமைச்சரும், தமிழக முதல்–அமைச்சருமான பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்–அமைச்சர் பொறுப்பில் நீடிப்பதற்கு பழனிசாமிக்கு தார்மீக தகுதியில்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு கட்சியினர் என அனைத்து தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது.


இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால் தமிழகம் போர்களமாக மாறும். தமிழக கவர்னர் மாளிகை சர்ச்சை மாளிகையாக மாறியுள்ளது. நிர்மலாதேவி விவகாரத்தில் அவரது வாக்குமூலத்தை வெளியிட வேண்டும். மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் கூறுவது போல் நிர்மலாதேவி வாக்குமூலம் வெளியிட்டால், மிக முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள். எனவே வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து விமர்சிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தும் காவிரி டெல்டாவில் விவசாயம் நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அடுத்த மாதம்(நவம்பர்) 3–ந் தேதி கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்