22 ஆண்டுகளுக்கு பின்பு சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர்

சிவகங்கை தெப்பக்குளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பின்பு பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இந்த தண்ணீரை அமைச்சர் பாஸ்கரன் மலர் தூவி வரவேற்றார்.

Update: 2018-10-14 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற சிவகங்கை தெப்பக்குளம். மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளத்தில் அரச குடும்பத்தினர் நீராடி வந்தனர். அப்போதே தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்காக நவீன முறையில் சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 1996–ம் ஆண்டு பெரியாறு கால்வாயில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பல வருடங்களாக வரத்துகால்வாய்கள் அடைபட்டதால் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. கடந்த 2 வருடத்திற்கும் மேலாக தெப்பக்குளம் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு போனது.

இதையடுத்து சிவகங்கை நகர் பொதுமக்கள் சார்பில் மீண்டும் பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்ப வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பொதுமக்களின் இந்த கோரிக்கை முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டு, தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப அமைச்சர் அனுமதி கோரினார். அதன்பேரில் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார் உள்பட வருவாய்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் மாவட்ட எல்லையில் உள்ள பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தனர்.

நேற்று மாலை அந்த தண்ணீர் தெப்பக்குளத்திற்கு வந்து சேர்ந்தது. முன்னதாக தெப்பக்குளத்தின் மடையில் தண்ணீர் வந்ததும் அமைச்சர், கலெக்டர் உள்பட பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:– சிவகங்கை நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர், துணை முதல்– அமைச்சர் ஆகியோர் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளத்திற்கு 200 கனஅடி தண்ணீர் வழங்க உத்தரவிட்டனர். 7 நாட்கள் இந்த தண்ணீர் வழங்கப்படும். இதற்காக சிவகங்கை நகர் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்