படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது கமல்ஹாசன் பேச்சு

படித்தவர்கள் அரசியல் எதற்கு? என ஒதுங்கி விடக்கூடாது என்று நாமக்கல்லில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2018-10-14 23:00 GMT
நாமக்கல்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 44 டாலராக இருந்த போது, அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இப்போது 100 டாலரை தாண்டி நிற்கிறது. இதனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.4½ லட்சம் கோடி என்பது எனக்கு வந்த தகவல்.

கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.4½ லட்சம் கோடி சம்பாதித்து வருகின்றனர். இதில் அரசுக்கு செலவும் உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் கோடி வரை மக்களுக்கு சேர வேண்டிய பணம். இது மக்களுக்கு சென்றடைய வேண்டும், அதை நீங்கள் கேட்க வேண்டும். மக்களுக்கான புரட்சி தொடங்கி விட்டதாகவே நினைக்கிறேன். அதற்கான அடையாளங்கள் இங்கே தெரிகிறது. அதற்கான தகவல்களை தர வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாகிறது.

அரசியல்வாதிகளுக்கும் தனியாக தொழில் இருக்க வேண்டும். திரைப்படத்தொழிலில் இருந்த என்னுடைய நேர்மை, அரசியலில் தொடரும். படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு? என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்து விட்டது. நோட்டாவுக்கு ஓட்டு போடும் நபர்களை மாற்றுவது பற்றி யோசித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

முன்னதாக நாமக்கல் நளா ஓட்டலில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். 

மேலும் செய்திகள்