தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றாலும் 50 சதவீத விசைப்படகுகளே மீன்பிடிக்க சென்றன

தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றாலும் 50 சதவீத விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

Update: 2018-10-15 23:00 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகள் உள்ளன.இந்த விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். கடல்வளம் குறைந்ததால் மீன்பிடி தொழில் நஷ்டத்தில் உள்ள நிலையில் தற்போது டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே படகுகளுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மத்திய,மாநில அரசுகள் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் பழுதடைந்துள்ள விசைப்படகுகளுக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் 14 நாட்களாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மீனவர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றாலும் டீசல் விலை உயர்வால் நேற்று மீன்பிடிக்க 50 சதவீதம் விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றுள்ளன.

இதுபற்றி மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். மாவட்ட நிர்வாகம் எங்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் வேலை நிறுத்தத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பண்டிகை காலங்கள் வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்