மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

Update: 2018-10-15 23:00 GMT
நாமக்கல்,

ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும்வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவ படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 4 ஆயிரம் பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர ரேஷன்கடைகள் மொத்தம் 919 உள்ளது. இவற்றில் 591 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 32 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 32 ரேஷன்கடைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. எனவே அவற்றில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது. மீதமுள்ள ரேஷன்கடைகள் வழக்கம்போல் இயங்கின.

இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்