தேவாரத்தில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க 2 கும்கிகள் வருகை

தேவாரத்தில், அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க 2 கும்கி யானைகள் இன்று வருகிறது.

Update: 2018-10-16 21:45 GMT
உத்தமபாளையம்,


தேவாரம் மலையடிவார பகுதியில் சமீப காலமாக காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது மட்டுமின்றி, விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றது. மேலும் காட்டுயானை தாக்கியதில் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர்.

இதையடுத்து அந்த காட்டுயானையை பிடிக்க கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு மாதமாக தேவாரம் பகுதியில் தங்கியிருந்து காட்டுயானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டு யானையை பிடிக்க முடியவில்லை. மேலும் இனப்பெருக்க காலம் தொடங்கியதால் கும்கியானைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

இதற்கிடையே அந்த காட்டுயானை மீண்டும் தனது அட்டகாசத்தை தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட தேவாரம் பென்னிகுவிக்நகர், வண்ணமயில் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் காட்டுயானை புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் சத்தம் போட்டு காட்டுயானையை விரட்டினர். இருப்பினும் அந்த காட்டு யானையால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதன்பேரில் காட்டுயானைகளை பிடிக்க நெல்லை மாவட்டம் முண்டந்துறையில் இருந்து 2 கும்கி யானைகள் இன்று (புதன்கிழமை) கொண்டு வரப்பட இருக்கிறது.

கும்கி யானைகளுடன் சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும் வருகின்றனர். அவர்கள் தேவாரம் பகுதியில் தங்கியிருந்து காட்டுயானையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்