சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கேரள அரசு முறையிடக்கோரி வேலூரில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-10-16 22:30 GMT
வேலூர்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்து அமைப்பினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கேரள அரசு முறையிடக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அய்யப்பன் சாமி சிலையுடன் அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு குருசாமி கோபால் தலைமை தாங்கினார். விஜயகுமார், திருநாவுக்கரசு, நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது என்பது ஆகம விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது. பிரம்மச்சாரிய விரதங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் இந்த முயற்சியை முறியடிப்போம். 50 வயதுக்கு மேற்பட்ட அல்லது 10 வயதுக்கு உட்பட்ட பெண்களே சபரிமலைக்கு செல்ல வேண்டும். பதினெட்டு படிகளை சாதாரண படிகளாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களே விரும்பாத இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கேரள அரசு முறையிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்