காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீர் சாவு; டாக்டர் மீது வழக்குப்பதிவு

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். போலீசார் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-19 22:45 GMT
மும்பை,

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது19). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் காட்கோபர் மேற்கில் உள்ள நாஜ்ம்ஸ் கிளினிக்கிற்கு சென்றார். கிளினிக் நடத்தி வரும் யுனானி டாக்டர் நசாமுதீன் சேக் கார்த்திக்கு ஊசி போட்டார்.

இந்தநிலையில் ஊசிபோட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு அவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவர் நசாமுதீன் சேக்கிடம் சிகிச்சை பெறச்சென்றார். அப்போது அவர் வலி போவதற்கு மீண்டும் ஒரு ஊசியை போட்டுள்ளார்.

இந்தநிலையில் கிளினிக்கிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வாலிபருக்கு ஊசிபோட்ட இடம் அழுகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சயான் ஆஸ்பத்திரி தடயவியல் துறை தலைவர் டாக்டர் ராஜேஸ் கூறுகையில், ‘‘உடல் அழுகியதால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருக்கலாம். அவரது தசைப்பகுதியின் மாதிரி ஆய்விற்காக பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

யுனானி டாக்டர் நசாமுதீன் சேக்கின் அலட்சியத்தால் தான் வாலிபர் கார்த்திக் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காட்கோபர் பார்க்சைட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்