தங்கு கடல் மீன்பிடிப்பதை கண்டித்து 2-வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தங்கு கடல் மீன்பிடிப்பதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-20 22:00 GMT
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கோர்ட்டு உத்தரவை மீறி பதிவு செய்யப்படாத 37 விசைப்படகுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கு கடல் மீன்பிடிக்கச் சென்றனர். இதனை கண்டித்தும், தங்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள ஒரு சில நாட்டுப்படகு மீனவர்களை தவிர மற்ற அனைவரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதற்கிடையே கோர்ட்டு உத்தரவை மீறி தங்கு கடலுக்கு சென்ற விசைப்படகுகளில் 29 விசைப்படகுகள் நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தன. அப்போது மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கினர். அந்த நோட்டீசில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள், இந்திய வணிக கப்பல் சட்டம் மற்றும் விதிகளுக்கு விரோதமாகவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பாணைக்கு கீழ்படியாமலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட காரணத்தினால் தங்களின் மீன்பிடி படகு, மறு அறிவிப்பு வரும் வரை தொழில் முடக்கம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த நோட்டீசில் விசைப்படகு உரிமையாளர்களிடம் கையெழுத்து பெற்ற பின்னரே அவர்கள் கரை திரும்பினர். மீதமுள்ள 8 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் இத்தகைய நோட்டீசு வழங்கப்பட உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்