மது குடித்தவர்களை கண்டித்த தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை; வாலிபர் கைது

மது குடித்தவர்களை தட்டி கேட்ட தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-20 22:15 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டிகுடித்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு கோபுரப்பட்டி கடைவீதியில் அமர்ந்து இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பாஸ்கர் (27) மற்றும் அவரது நண்பர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் தரகுறைவாக பேசியுள்ளனர். இதை பார்த்த பெரியசாமி, பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தாதீர்கள், தரக்குறைவாக பேசாதீர்கள் என கூறி கண்டித்தாராம். பின்னர் பெரியசாமி அருகே உள்ள கோவில் முன்பு படுத்து தூங்கினார். இந்நிலையில் குடிபோதையில் அங்கு வந்த பாஸ்கர், கீழே கிடந்த கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த பெரியசாமியின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், சப்–இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றம் போலீசார்சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலையில் பாஸ்கரை கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்