ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

ஓட்டேரியில், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-22 00:00 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், ஆயுதப்படை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வேலூரில் பயிற்சி பெற்று வந்த விக்னேஷ், சென்னையில் பணியமர்த்தப்பட்டார். இதனால் குழந்தையை லட்சுமியின் தாயார் வீட்டில் விட்டுவிட்டு கணவன்-மனைவி இருவரும் சென்னை வந்து ஓட்டேரியில் உள்ள வீட்டிற்கு குடிவந்தனர்.

கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற விக்னேஷ், மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி லட்சுமி, வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என லட்சுமியின் தந்தை ராமசாமி, ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். மேலும் லட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.

இந்த நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக லட்சுமி தற்கொலை கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர், ஆயுதப்படை போலீஸ்காரர் விக்னேசை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேஷின் தந்தை நாகராஜ், தாய் தேன்மொழி, தங்கை பிரியங்கா ஆகியோரை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்