சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி: பெண்ணிடம் 17 பவுன் நகை, பணம் கொள்ளை

சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் 17 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-21 21:45 GMT
சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள நஞ்சப்பதேவர் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இளவரசி (வயது 33). இவர்களுக்கு 6 வயதில் மனோஜ் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை மூர்த்தி வெளியே சென்று இருந்தார்.

இளவரசி வீட்டின் மாடியில் வெயிலில் காயவைத்த பருப்பை எடுக்க சென்றார். அப்போது சுற்றுச் சுவர் மீது ஏறி குதித்து மர்ம ஆசாமி வீட்டுக்குள் நுழைந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த இளவரசி வேகமாக கீழே இறங்கி வந்தார். அதற்குள் வீட்டிற்குள் புகுந்த அந்த ஆசாமி, சிறுவன் மனோஜின் கழுத்தில் கத்தியை வைத்து, நகை, பணத்தை தருமாறு இளவரசியை மிரட்டி உள்ளார். ஆனால் அவர் பணம் மற்றும் நகையை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி பணம், நகை தராவிட்டால் சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டினார். மேலும் அந்த நபர் கத்தியால் குத்தியதில், இளவரசியின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன இளவரசி, தான் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை அந்த ஆசாமியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்டு அந்த ஆசாமி, அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி நகை, பணத்தை பறித்து சென்றுள்ளான். அவனுடைய அடையாளங்கள் குறித்து இளவரசியிடம் விசாரித்து வருகிறோம் என்றனர். சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பெண்ணிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்