அய்யனார் கோவில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

குன்னம் அருகே உள்ள அய்யனார் கோவில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-21 23:00 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள வரகூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தினமும் பூஜை செய்து வந்தார். வழக்கம்போல் சுப்பிரமணியன் தினமும் காலை, மாலை இருவேளையும் கோவிலில் பூஜை செய்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பூஜையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலில் பூஜை செய்ய அவர் வந்தார். அப்போது கோவிலில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்களை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் கோவில் உண்டியல் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்து பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுப்பிரமணியன் குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அறநிலை துறை ஆய்வாளர் சன்னாசி மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்