போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி தஞ்சையில் 3 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-10-22 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்பு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்த வேண்டும். ஓய்வு பெறும்போது பணப்பலன்கள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும்.


240 நாட்கள் பணி முடித்த அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போனஸ் உச்சவரம்பை தளர்த்தி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படட்ன.

இதேபோல ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்பு தொ.மு.ச. கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொ.மு.ச. கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஐ.என்.டி.யூ.சி. துணை செயலாளர் வெங்கடேசன், அம்பேத்கர் சங்க தலைவர் இளங்கோவன், த.மா.கா. பொதுச் செயலாளர் சந்திரசேகரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர்கள் அப்பாத்துரை, அன்புமணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், தொ.மு.ச. மாவட்ட தலைவர் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்