மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-10-22 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த நாகமங்கலம் நீலகிரி காலனி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 33). கூலித்தொழிலாளியான இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி அவளது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியே வந்தார்.

இதை கவனித்த சிறுமியின் பெற்றோர் பாபுவை பிடித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி வழக்கு பதிவு செய்து, பாபுவிடம் விசாரணை நடத்தியதில், அவர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பாபுவை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி, அத்துமீறி வீட்டில் நுழைந்த குற்றத்திற்காக பாபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து பாபுவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்