மானியம் வழங்குவதற்காக டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது

புதிய மினிலாரி வாங்க மானியம் வழங்குவதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-23 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத்துப்பாளையம் கோசக்காட்டூர் பழைய தெருவை சேர்ந்த பசுபதியின் மகன் ராஜ்குமார் (வயது 32). டிரைவர். இவர் சொந்தமாக புதிய மினி லாரி வாங்க முயற்சி செய்தார். இதற்காக மானியம் கேட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (தாட்கோ) கடந்த ஜூலை மாதம் 23–ந் தேதி விண்ணப்பித்தார். அதில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 86 மானியம் வழங்கப்படும் என்று ராஜ்குமாரிடம் தாட்கோவின் ஈரோடு மாவட்ட மேலாளர் போஜன் (55) கூறியுள்ளார். மேலும் அவர், மானியம் வழங்க தீபாவளி பண்டிகைக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ராஜ்குமாரிடம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்குமார் இதுதொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போஜனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ராஜ்குமாரிடம் கொடுத்து தாட்கோ மேலாளர் போஜனிடம் லஞ்சமாக கொடுக்கும்படி போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு ராஜ்குமார் நேற்று சென்றார். அங்கு மாவட்ட மேலாளர் போஜனை சந்தித்த அவர், ரசாயனம் தடவப்பட்ட ரூ.5 ஆயிரம் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து சென்று போஜனை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான போஜன் கோவை மாவட்டம் துடியலூர் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்