கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.

Update: 2018-10-24 22:30 GMT
உணவு பாதுகாப்பு துறை சார்பில், ‘ஸ்வஸ் பாரத் யாத்திரா‘ என்ற தலைப்பில், ஆரோக்கியமான உணவு, பாதுகாக்கப்பட்ட உணவு, செறிவூட்டப்பட்ட உணவை அனைவரும் உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கடந்த 16-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் காலையில் கயத்தாறு சன்னதுபுதுக்குடியில் தொடங்கிய சைக்கிள் பேரணி மாலையில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியை வந்தடைந்தது. தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சிவகாசி வரையிலும் சைக்கிளில் செல்கின்றனர். வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி சைக்கிள் பேரணி புதுடெல்லியை சென்றடைகிறது.

இதையொட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ஆரோக்கியமான, பாதுகாக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட உணவை அனைவரும் உண்ண வேண்டும். சரிவிகித உணவுகளை உண்ணுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உணவில் குறைத்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறினார். பின்னர் அவர், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த உணவுப்பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.


விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, உணவு பாதுகாப்பு உதவி இயக்குனர்கள் லாரன்ஸ், டோன்ஸ், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன், கல்லூரி முதல்வர் சண்முகவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்