மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-10-24 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் 9-வது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவரது மகன் எழி என்கிற எழிலரசன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி பெரம்பலூரை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் 17-ந்தேதி அந்த மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த எழிலரசன், அந்த மாணவியை மீண்டும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த மாணவிக்கும், இதனை தட்டி கேட்ட அவரது தாய், தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து அந்த மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்து பெரம்பலூர் சப்-சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை நேற்று மாலை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக எழிலரசனுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் தொகை செலுத்த தவறினால் மேலும் 4½ ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி விஜயகாந்த் அளித்த தீர்ப்பின் விவரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிக்காக வாதாடிய அரசு தரப்பு வக்கீல் சித்ரா கூறுகையில், எழிலரசன் வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அந்த அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துமீறி மாணவியின் வீட்டில் எழிலரசன் நுழைந்ததற்காக 3 ஆண்டுகளும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டும் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததால் 1 ஆண்டும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும். இந்த 14 ஆண்டு சிறை தண்டனையை எழிலரசன் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாக கூறினார். இதையடுத்து எழிலரசனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்