கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு: 7 மாவோயிஸ்டுகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்கக்கோரி கோஷமிட்டதால் பரபரப்பு

கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கோர்ட்டில் ஆஜரானபோது மாவோயிஸ்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-25 21:30 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் அருகே உள்ள வடகவுஞ்சி வனப்பகுதியில், கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், செண்பகவல்லி, ரீனா ஜாய்ஸ்மேரி, பகத்சிங், காளிதாஸ், கண்ணன், ரஞ்சித், நீலமேகம் ஆகிய 7 மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், 7 பேரையும் கேரளா உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இவர்களில், ரஞ்சித், நீலமேகம் ஆகிய 2 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று திண்டுக்கல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த செண்பகவல்லி, ரீனா ஜாய்ஸ்மேரி, பகத்சிங், காளிதாஸ், கண்ணன் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேபோல, ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கு தனித்தனியாக தலா 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர், மாவோயிஸ்டுகள் தரப்பில் வக்கீல் கண்ணப்பன் ஆஜராகி வாதாடினார். அப்போது, இந்த வழக்கை விரைந்து முடிக்கும் வகையில் மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாலமுருகன், மாவோயிஸ்டுகள் 7 பேர் மீதான வழக்கை மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாவோயிஸ்டுகள் கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.

அப்போது, மாவோயிஸ்டு கண்ணன் மட்டும் கோஷமிட்டபடியே வெளியே வந்தார். அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மாவோயிஸ்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். மாவோயிஸ்டு வாழ்க, நக்சல் பாரி வாழ்க என்று கோஷமிட்டார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, போலீசார் மாவோயிஸ்டுகளை வேனில் ஏற்றி சிறைகளுக்கு அழைத்து சென்றனர். 7 மாவோயிஸ்டுகள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்