கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-10-25 22:30 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி கணக்க விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பிரகதீஸ்வரர் சமேத பெரிய நாயகி அம்பாளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு பக்தர்கள் குறுக்கள் தெரு, கணக்க விநாயகர் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கிரிவலம் வந்தனர். அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிரிவலத்தை முன்னிட்டு மலைமீதுள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு மஞ்சள், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், மலை அடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், மலையை சுற்றி அரோகரா... அரோகரா... என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் மலைக்கோவிலை சுற்றி வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலத்தில் செட்டிகுளம், சத்திரமனை, வேலூர், இரூர், பாடாலூர், குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிரிவலத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜூ, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கிரிவலம் கமிட்டியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்