வேலை நாட்களை அதிகரிக்கக்கோரி சத்தி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

வேலை நாட்களை அதிகரிக்கக்கோரி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டார்கள். முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-26 23:00 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 ஆண்கள், 400 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நேற்று பகல் 11.30 மணி அளவில் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார்கள். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் அங்கு வந்து முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது, ‘ஆண்டிற்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ.500 என சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்க வேண்டும். வேலை செய்ய மண்வெட்டி, கடப்பாரை போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் சம்பளம் கொடுப்பதில் தாமதமாகிறது. இந்த நிலை நீடித்தால் வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களுக்கு ஆட்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘இதுதொடர்பாக மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்களது ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், தொழிலாளர்களிடம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போராட்டத்தின் போது சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையை சேர்ந்த குமரப்பன் (வயது 70) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மயக்கம் தெளிந்தார். காலையில் எதுவும் சாப்பிடாமல் வெயிலில் அதிக நேரம் நின்றதால் மயங்கி விழுந்தது தெரியவந்தது.

இதேபோல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டார்கள்.

மேலும் செய்திகள்