ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

ராமேசுவரம் பகுதியில் பலத்த மழைபெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2018-10-26 22:30 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.இதனால் ராமேசுவரம் மார்க்கெட் தெரு, விளையாட்டு மாரியம்மன் கோவில் தெரு,கடைகள் அமைந்துள்ள மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. விளையாட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

வீட்டிற்குள் புகுந்த நீரை பெண்கள் பாத்திரம் மூலம் இரைத்து வெளியே ஊற்றினார்கள். மார்க்கெட் பகுதியில் அதிகஅளவில் மழைநீர் தேங்கி நின்றதால் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க சென்ற பொது மக்கள் சிரமப்பட்டனர்.

தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பும் ராமதீர்த்தம் சாலை,கோவில் ரத வீதி சாலையிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தனுஷ்கோடி,பாம்பன்,தங்கச்சிமடம்,மண்டபம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.தனுஷ்கோடி,பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்பாகவே காணப்படு கிறது.பலத்த மழையால் பேய்க் கரும்பில் உள்ள அபதுல்கலாம் மணிமண்டபம் முன்பும் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

மாவட்டத்தில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:– ராமநாதபுரம்–40.5, ராமேசுவரம்–75.4, தங்கச்சிமடம்–45.2, பாம்பன்–37.3, முதுகுளத்தூர்–19.8, கடலாடி–16.6, வாலிநோக்கம்–14, பள்ளமோர்குளம்–14, தொண்டி–4.4, திருவாடானை–2.2, ஆர்.எஸ்.மங்கலம்–4, மண்டபம்–55.

மேலும் செய்திகள்