ராகுல்காந்தி கைதுக்கு எதிர்ப்பு: அமைச்சர் நமச்சிவாயம் சாலைமறியல்

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட அமைச்சர் நமச்சிவாயம் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-26 23:30 GMT

புதுச்சேரி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக்குமார் வர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இதை அறிந்த புதுவை காங்கிரசார் ராஜா தியேட்டர் அருகே திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மறியலில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், புதுவை மாநில நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், சாம்ராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் சரவணன், மாணவர் காங்கிரஸ் துணைத்தலைவர் விக்ரமாதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தமறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அமைச்சர் நமச்சிவாயம் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு துணைபோகிறார். ரபேல் விமான பேர ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியானதால் சி.பி.ஐ. அதிகாரியை மாற்றுகிறார். இதை எதிர்த்து போராடிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கைது செய்கிறார்.

சர்வாதிகாரத்தை எதிர்த்து ராகுல்காந்திக்கு ஆதரவாக எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்