சட்டசபையை முற்றுகையிட முயற்சி மீனவர் விடுதலை வேங்கைகள் 80 பேர் கைது

சட்டசபையை முற்றுகையிட முயன்ற மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினை சேர்ந்த 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-26 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கவேண்டும், மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்–அமைச்சரிடமும் சமீபத்தில் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மி‌ஷன் வீதி மாதாகோவில் அருகே கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த ஊர்வலத்துக்கு அமைப்பாளர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் அங்கு கோ‌ஷம் எழுப்பினார்கள். தடுப்புகளை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றனர்.

இதைத்தொடர்ந்து தடையை மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்ற 80 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறிதுநேரம் கரிக்குடோனில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்