கரூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு

கரூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2018-10-26 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்கத்தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சுவாதி நேற்று குளித்தலை தலைமை அரசு மருத்துவமனை, அரவக்குறிச்சி மருத்துவமனை, உப்பிடமங்கலம் மற்றும் மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சலுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் இருக்கின்றனவா?, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகள் கரூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சுவாதி நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் 5 பேர் டெங்கு காய்ச்சலாலும், 6 பேர் பன்றிக்காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அனைவரும் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நோய்கள் பரவாமல் இருக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, இணை இயக்குனர் (மருத்துவப்பணி) விஜயகுமார், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) நிர்மல்சன், நகர்நல அதிகாரி ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்