ஊட்டியில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் - துரைமுருகன் தலைமையில் நடந்தது

ஊட்டியில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2018-10-26 22:30 GMT
கூடலூர்,

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு நேற்று முன்தினம் நீலகிரிக்கு வந்தது. பின்னர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, இத்தாலியன் பூங்கா, ராஜ்பவன், பர்ன்ஹில் பேலஸ், மரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை சட்டமன்ற குழு ஆய்வு செய்தது.

நேற்று 2-வது நாளாக ஊட்டியில் உள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் சட்டமன்ற பேரவை குழுவின் ஆய்வு கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டமன்ற பேரவை குழு தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண்மை துறை சார்பில் பெருநகர காய்கறி தொகுப்பு வளர்ச்சி திட்டம், உள் கட்டமைப்பு திட்டங்கள், குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம் நிறுவுதல் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து பராமரிப்பு இல்லாத தோட்ட பயிர்களை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மற்றும் வனம் மேம்படுத்துதல், மனித வன உயிரின மோதலை தடுத்தல், வனத்துறையின் நடவடிக்கை, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மேம்படுத்துவது, சமூக வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் என பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் வருவாய் வரவுகளின் நிலை, வரி மதிப்பீடு, விடுதலை ஆவணங்கள் மீது குறைவாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தீர்வை மற்றும் பதிவு கட்டணம் குறித்து பேசப்பட்டது.

தகவல் தொழில் நுட்பம், மின் ஆளுமை திட்டங்களை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்தும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், சாலை திட்டங்கள் என அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி அலுவலர்களுடன் சட்டமன்ற குழுவினர் கலந்துரையாடினர். கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன், ஆர்.நடராஜ், முகமது அபுபக்கர், ஆர்.கணேஷ் உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்