வெளிநாட்டில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி தங்கம் சிக்கியது 2 பேர் கைது

வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2018-10-28 23:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னை வந்த விமானங்களில் இருந்து இறங்கி வந்த 2 பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த பார்சல்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் சமையலுக்கான எலக்ட்ரானிக் மைக்ரோ ஓவன் மற்றும் எலக்ட்ரானிக் சமையல் கருவிகள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்தும் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் மலேசியாவில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், நேபாளம் நாட்டின் எல்லையான பக்டோகிரா என்ற பகுதியில் வைத்து தங்கம் இருந்த எலக்ட்ரானிக் சமையல் கருவிகள், மைக்ரோ ஓவன் ஆகியவற்றை இவர்களிடம் கொடுத்து சென்னைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும், அதன்படியே இவர்கள் நேபாளம் நாட்டில் இருந்து விமானத்தில் சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்ததும் தெரிந்தது.

சென்னையில் உள்ள யாருக்காக அந்த தங்கம் கடத்தி வரப்பட்டது?, இதன் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் யார்? என பிடிபட்ட 2 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்