கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை : கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த கலெக்டர் உத்தரவு

கடலூர் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று அதிகளவில் வந்த நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை. இதையடுத்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த உத்தரவிட்டார்.

Update: 2018-10-28 21:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தனியார் மருத்துவ மனைகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கடலூர் அரசு மருத்துவ மனையில் குவிய தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வந்ததால் மாலை நேரத்தில் கூட்டம் அதிகரித்தது.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு 2 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

இதனிடையே இது பற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர், இரவு 7 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக டாக்டர்களை பணியில் அமர்த்த உத்தரவிட்டார். தொடர்ந்து டெங்கு சிறப்பு வார்டுக்கு சென்று, அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் இது பற்றி கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் குழுவாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லிக்குப்பம், வடலூரில் 2 கடைகளில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டது. இதற்காக 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் இன்றைய(அதாவது நேற்று) நிலவரப்படி 650 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் புவனகிரியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைக்காக சென்ற இடத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருந்தாலே டெங்கு காய்ச்சலை தடுக்கலாம். ஆகவே டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

மேலும் செய்திகள்