பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

Update: 2018-10-29 23:00 GMT
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 335 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

உடையார்பாளையம் கிராம பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிடர் துறையின் மூலம் கடந்த 2008-ம் ஆண்டில் தமிழக அரசானது சுமார் 120 நபர்களுக்கு இடத்தை கையகப்படுத்தி அளந்து காட்டி ஒவ்வொரு நபருக்கும் 3 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் அந்த இடத்திற்கு இதுநாள் வரை பட்டா வழங்க வில்லை. இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுநாள் வரை, பட்டா கிடைக்கவில்லை. எனவே இடம் இருந்தும் அகதிகளாக உள்ளோம். மேலும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பழங்குடியின மக்கள் சார்பில் மனு கொடுத்தனர். அதில், குவாகம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் அருகில் உள்ள மலைக்காடுகள் சார்ந்து உள்ளது. அந்த மக்களுக்கு வன உரிமைகள் சட்டத்தின்படி, வனம் சார்ந்த உரிமைகள் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கினால் தான் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொது செயலாளர் செல்வம், குவாகம் வன உரிமைக்குழு தலைவர் தருமதுரை மற்றும் பழங்குடியின மக்கள் கூறியிருந்தனர்.

சோழன்குடிக்காடு கணேசன் என்பவர் கொடுத்த மனுவில், அரியலூர் நகர பகுதியில் இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் அதிகமாக செல்லும் சாலைகளில் அதிக சத்தம் கொண்ட பட்டாசு வெடிப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சிலருக்கு உடலில் காயம் ஏற்படுகிறது. ஏற்கனவே நகர பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது, குறிப்பாக எம்.பி. கோவில் தெரு மற்றும் சின்னகடை தெரு பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என முன்பு இருந்த சப்-கலெக்டர் சந்திரசேகர சாகமூரி உத்தரவிட்டார். அதையடுத்து பட்டாசு வெடிக்காமல் இருந்தது. தற்போது இந்த உத்தரவு மீறப்பட்டு மீண்டும் பட்டாசு வெடிக்கப்படுகிறது. எனவே இறுதி ஊர்வலங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்