நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை ; கலெக்டரிடம், மாணவர்கள் புகார்

நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என்று மாணவர்கள் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Update: 2018-10-29 21:45 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மொத்தம் 267 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 460 மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 2 பயனாளிகளுக்கு பள்ளி படிப்பு மற்றும் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.24 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வரும் மாணவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், சமீபத்தில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டுள்ள எங்கள் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் 23 பேர் படித்து வருகிறோம். ஆனால் இது வரை எங்களுக்கு பாடம் நடந்த ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியரும் கிடையாது.

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். சிலர் தேர்ச்சி அடையவில்லை. இதனால் மாணவர்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆகவே எங்களுக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்