கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் - மேலும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-10-30 21:45 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக வெளி நோயாளிகள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளும் 200-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர டெங்கு காய்ச்சல் என்று கண்டறிந்தால் அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டாக்டர்கள் செய்த பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிதம்பரம் மீதிக்குடி ரமேஷ் (வயது 40), திருவந்திபுரம் சுப்பிரமணி (55), பாச்சாரப்பாளையம் ராஜசேகர் (24), காட்டுமன்னார்கோவில் குணமங்கலம் வசந்தகுமார் (20), செம்மண்டலம் காசிநாதன் மனைவி செல்வி (40), நெல்லிக்குப்பம் ரங்கநாதன் மகள் நித்தியஸ்ரீ (8), வல்லம்படுகை கச்சிராயர் மனைவி மணிமேகலை (50), நெய்வேலி கமலேஷ் (35) உள்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்த 10 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்