தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-10-31 21:30 GMT
விழுப்புரம்,

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து இனிப்பு கடைகளிலும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இனிப்பு, காரத்தை விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். தற்காலிகமாக இனிப்பு தயாரிப்பவர்களும், திருமண மண்டபங்களில் தயாரிப்பவர்களும் பதிவு, உரிமம் பெறுவது அவசியம். தவறும்பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிப்பு, கார வகைகளை தயாரிக்க தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தரமான எண்ணெய், நெய் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தயாரித்த இனிப்பு, கார வகைகளை கண்ணாடி பெட்டிக்குள் மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார வகைகளில் வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது. பால் சார்ந்த இனிப்பு வகைகளை பண்டிகைக்கு முன்பாக தயாரித்து 3 முதல் 4 நாட்களுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும். நெய் கொண்டு தயாரிக்கும் இனிப்புகளை தனியாக விற்பனைக்கு வைக்க வேண்டும்.

மேலும் தரமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். பொட்டலமிடும் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பவர் முகவரி, உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் இனிப்பு, கார வகைகளில் தரமின்மை, அளவுக்கு அதிகமான வண்ணங்கள் பயன்பாடு போன்றவை இருந்தால் இது பற்றி உணவு பாதுகாப்புத்துறைக்கு 94440 42322 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்