வேதாரண்யத்தில் விடிய, விடிய பலத்த மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கடல் சீற்றமாக காணப்பட்டதால் நாகை பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-11-01 23:00 GMT
வேதாரண்யம்,
இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியது. இதை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது.பின்னர் பலத்த மழையாக விடிய, விடிய பெய்தது. நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும், பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பலத்தமழையால் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றனர்.

இந்த மழை சம்பா பயிர்களுக்கு பயனை தரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதே போல நாகையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் சாலையில் நடந்து சென்ற போது மக்கள் குடைப்பிடித்தவாறு சென்றனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, கீழையூர், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது.

டீசல் விலை உயர்வு மற்றும் மானிய விலையில் டீசல் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் சரியான வருவாய் கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மழை பெய்ததால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் நாகை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் செய்திகள்