வேலூர் மாநகராட்சியில் ஒட்டுமொத்த டெங்கு ஒழிப்பு முகாம் கலெக்டர் ராமன் தொடங்கிவைத்தார்

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் 60 மருத்துவக்குழுக்களை கொண்டு நேற்று ஒட்டுமொத்த டெங்கு ஒழிப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனை கலெக்டர் ராமன் தொடங்கிவைத்தார்.

Update: 2018-11-01 23:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் 60 மருத்துவ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்து ஆய்வுசெய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை மற்றும் வேலூர் மாநகராட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள 60 மருத்துவ குழுக்களையும் வேலூருக்கு வரவழைத்து வேலூர் மாநகராட்சியில் வார்டுக்கு ஒரு மருத்துவக்குழு வீதம் 60 வார்டுகளிலும் நேற்று ஒட்டுமொத்த டெங்கு ஒழிப்பு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 60 மருத்துவ கண்காணிப்புக்குழுவினரும் வேலூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு ஒட்டுமொத்த டெங்கு ஒழிப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் வரவேற்று பேசினார். உதவி கலெக்டர் மெகராஜ் சிறப்புரையாற்றினார்.

கலெக்டர் ராமன் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கி நடமாடும் மருத்துவக்குழு வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:-

தற்போது மழைக்காலம் என்பதால் காய்ச்சல் தொற்று ஏற்படவாய்ப்பு உள்ளது. கடந்த மாதம் வேலூர் மாவட்டத்தில் ஒருவருக்குக்கூட காய்ச்சல் ஏற்படவில்லை. தற்போது சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் பயப்படவேண்டாம். அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்டால் போதும். ஊசிப்போடக்கூட தேவையில்லை.

காய்ச்சல் ஏற்பட்டதும் தன்னிச்சையாக போலி டாக்டர்களிடம் சென்று சிகிச்சைபெறக்கூடாது. காய்ச்சல் நம்மை என்னசெய்யும் என்று நினைக்கக்கூடாது. இந்த முகாம்களில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்தும், பன்றிக்காய்ச்சலை தடுக்க கைகழுவும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தனியாக மருத்துவமுகாம்களும் நடத்தப்படும்.

டெங்கு கொசுப்புழு இருந்தால் தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே இன்று (நேற்று) முதல் அபராதம் விதிக்கப்படும். சுகாதார பணியாளர்கள் வீடுவீடாக ஆய்வுசெய்யும் பணிகளுக்கும், மருத்துவர்கள் மருத்துவ முகாம் நடத்துவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும். சுகாதாரத்துறை வழங்கும் நிலவேம்பு கசாயத்தையும் பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்