நாமக்கல்லில் பன்றிக்காய்ச்சலுக்கு முதியவர் பலி?

நாமக்கல்லில் பன்றிக்காய்ச்சலுக்கு முதியவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-11-02 00:26 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்டது கணேசபுரம். இங்குள்ள சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 81). இவர் நாமக்கல்லில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சர்க்கரை குறைபாட்டால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராமதாஸ் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் ரத்த மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.


அதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராமதாஸின் உறவினர்கள், அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமதாசை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி ராமதாஸ் உயிரிழந்தார். ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும், அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமதாஸின் உறவினர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் சாக்கடையை தூர்வாரினால் அதை அப்புறப்படுத்தாமல் அங்கேயே தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவரின் குடும்பத்தாரான எங்களுக்கு நோய் தடுப்பு மாத்திரைகள் கூட ஆஸ்பத்திரியில் கொடுக்க தயங்குகிறார்கள். பணம் செலுத்த முன்வந்தாலும் அந்த மாத்திரை கிடைப்பதில்லை. எனவே வரும் காலங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தாருக்கு நோய் தடுப்பு மாத்திரை எளிதில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எங்கள் பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்வதோடு, சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்