மாவட்டத்தில் நடப்பாண்டில் 25,453 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 25,453 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2018-11-02 23:00 GMT
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்றார். இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 1,030 மாணவ-மாணவிகளுக்கு ரூ.37.84 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

தமிழக அரசு சார்பில் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 386 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 644 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,030 மாணவ, மாணவிகளுக்கு ரூ.37.84 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 25,453 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 35 லட்சத்து 14 ஆயிரத்து 322 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு நிதி நெருக்கடியிலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் 27,205 கோடியே 88 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் நோக்கில் தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 6 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.8 சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்தில் இது 48.6 சதவீதமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்துவிட்டு உயர்கல்வி பெறுவோர் 96.82 சதவீதமாக உள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை சிறந்த முறையில் செயல்படுத்தி வருவதை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்களை மேன்மைபடுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தர்மபுரி உழவர் சந்தை மற்றும் தர்மபுரி தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய ஆவின் பாலகங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன் அருள், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், ஆவின் பொது மேலாளர் பசுவராஜ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், தலைமை ஆசிரியர்கள் லட்சுமணன், தமிழ்செல்வி, தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்