மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் பால் நிறுவன மேற்பார்வையாளர் பலி 2 பேர் படுகாயம்

மாரண்டஅள்ளியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் பால் நிறுவன மேற்பார்வையாளர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-11-02 22:30 GMT
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 29). இவர் பஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்தார். நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்து அதே நிறுவனத்தில் வேலை செய்த பெலமாரனஅள்ளியை சேர்ந்த முனிமாதன் (30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தார்.

மாரண்டஅள்ளி மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது எதிரே அதே பகுதியை சேர்ந்த அஜய்(19) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கோவிந்தராஜ், முனிமாதன், அஜய் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.


அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வாலிபர் அஜய் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், முனி மாதன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்