மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் சாவு

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-11-02 22:30 GMT
மதுரை, 


மதுரை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை அழகர்கோவில் ரோடு சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 44), மேலூர் ஆட்டுக்குளத்தை சேர்ந்த சங்கர் மனைவி அல்லிமலர் (35) ஆகியோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களது ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 2 பேருக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் பன்றிக்காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மந்திரமூர்த்தி, அல்லிமலர் இருவரும் பலியாகினர்.

இதன் மூலம் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. இது தவிர 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்பால் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்