வாகன சோதனையில் ஈடுபட்ட சப்–இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

வாகன சோதனையில் ஈடுபட்ட சப்–இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-03 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையில், போலீசார் காங்கரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அதிவேகமாக சென்றனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றனர். இதையடுத்து போலீசார் விரட்டி சென்று திருவட்டார் பஸ் நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மாத்தூரை  சேர்ந்த பிரேம் விஜில்ராஜ் (வயது 33), பருத்திவிளையை சேர்ந்த மகேஷ் குமார் (31) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் சப்–இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வாகனத்தை அதி வேகமாக ஓட்டி சென்றது ஏன்? என விசாரித்தார். உடனே, அவர்கள் சப்–இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சத்திய சோபன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிரேம் விஜில் ராஜ், அவருடைய நண்பர் மகேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான பிரேம் விஜில் ராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

மேலும் செய்திகள்