கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2018-11-03 23:15 GMT
திருவண்ணாமலை,

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வாய்ப்பு உள்ளது.

நகரத்தினையும், மலை சுற்றும் கிரிவலப்பாதையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர் 8-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 2-வது மாடியில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20-ந் தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் எந்த காரணத்தை கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அன்னதானம் வழங்க விரும்புவோர் உரிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட்டு அளவிலான 5 புகைப்படங்கள், தங்களது முகவரியை தெரிவிக்கும் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல் மற்றும் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் எந்த காரணத்தை கொண்டும் உணவு சமைக்கக் கூடாது.

உணவுப் பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்எண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி கிடையாது. அன்னதானம் வழங்க எந்த இடத்தில், எந்த தேதியில், எந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் அந்த நேரத்திற்குள்ளாக அன்னதானம் வழங்கி முடிக்கப்பட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

அன்னதானம் வழங்க வாழை இலை, தொன்னை மற்றும் பாக்கு மட்டையால் தயார் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் வினியோகிக்கக் கூடாது. அன்னதானம் வழங்கும் இடத்திலேயே பக்தர்கள் உணவு அருந்திவிட்டு கழிவுப்பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை கூடைகளை அன்னதானம் அளிக்கும் நபர்களே எடுத்து வந்து வைத்து குப்பை கழிவுகளை சேகரித்து பின்னர் அப்புறப்படுத்த வேண்டும்.

அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தினை சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும். அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறைகளை பின்பற்றி மலை சுற்றும் கிரிவலப்பாதையினை தூய்மையாக வைத்து கொள்ள அனைத்து தரப்பினர்களையும், பக்தர்களையும் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்