காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2018-11-03 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழகம்-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பார்வை கோபுரம், தொங்கு பாலம், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்