மாநகராட்சி விளையாட்டு திடல்கள் புனரமைக்கப்படுமா? பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சென்னையில் பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி விளையாட்டு திடல்கள் புனரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

Update: 2018-11-04 22:30 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் 210 விளையாட்டு திடல்கள், 96 உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், 4 இறகு பந்து உள்விளையாட்டரங்கம், 1 கூடைபந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் 2 நீச்சல் குளங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 22 உடற்பயிற்சி கூடங்களில் மல்டி ஜிம், டிரெட்மில் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றில் பயிற்சியளிக்க உடற்பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தினசரி 50 முதல் 100 நபர்கள் வரை இந்த உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மொத்தம் உள்ள 210 விளையாட்டு திடல்களில் 14-க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்களில் கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து, இறகு பந்து, கூடைப்பந்து போன்ற மைதானங்கள் அமைக்கப்பட்டு நட்சத்திர அந்தஸ்துமிக்க விளையாட்டு திடல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

மந்தைவெளி, ஆர்.ஆர்.காலனி, ஜாபர்கான் பேட்டை, மயிலாப்பூர் கற்பகம் அவென்யூ மற்றும் செனாய் நகர் ஆகிய இடங்களில் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. அதே போல் கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் கீழ்ப்பாக்கம் கார்டனில் அமைந்துள்ளது. அண்ணா நகர், செனாய் நகர், நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கே.கே.நகர் மற்றும் தியாகராயநகரில் ஸ்கேட்டிங் ரிங்க் உள்ளது. நீச்சல் குளம் மெரினா கடற்கரை மற்றும் மை லேடிஸ் பூங்காவில் அமைந்துள்ளது.

இந்த விளையாட்டு திடல்களில் ஏராளமானோர் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இதில் பெரும்பாலான விளையாட்டு திடல்கள் சிதைந்து அலங்கோலமாக உள்ளன. இத்திடல்களில் உள்ள பயிற்சி கருவிகளும், நாற்காலிகளும் சேதமடைந்து இருக்கின்றன. இதனால் இந்த திடல்கள் பார்க்கவே பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இதனால் இங்கு பயிற்சி மேற்கொள்ள மாணவர்கள் வருவதே இல்லை. மேலும் சில திடல்களை தனியார் கம்பெனிகள் ஆக்கிரமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

2 வருடங்களுக்கு முன்பு விளையாட்டு திடல்களை புனரமைப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த விளையாட்டு திடல்களை முறையாக பராமரிக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அப்படி புனரமைக்க தாமதம் ஏற்படும் பட்சத்தில், இந்த விளையாட்டு திடல்களின் பராமரிப்பு பணியை தனியாருக்கு முறையாக டெண்டர் விடலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஏற்கனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த கழிப்பறைகள் தனியார் வசம் சென்றுள்ளன. அலங்கோலமாக காட்சியளித்த அந்த கழிப்பறைகள் தற்போது பார்க்கவே அழகாக தெரிகின்றன. அதுபோல தற்போது பாழடைந்து கிடக்கும் விளையாட்டு திடல்களை மாநகராட்சி புனரமைப்பு என்பது கடினமான காரியம் தான். உள்ளாட்சி தேர்தல் நடக்காத சூழ்நிலையில் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது கடினமான விஷயம். இதனால் மாநகராட்சி விளையாட்டு திடல்கள் தற்போது திறந்தவெளி கழிப்பிடமாகவும், ‘பார்’ ஆகவும் உருமாறி இருக்கின்றன.

எனவே மாணவர்களின் பயிற்சி மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி விளையாட்டு திடல்களை உடனடியாக புனரமைக்கும் நடவடிக்கைகள் கையாளப்பட வேண்டும். இல்லையென்றால் முறையாக டெண்டர் விட்டு, தனியார் வசம் ஒப்படைக்கலாம். அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிப்பதுடன், அலங்கோலமாக கிடக்கும் விளையாட்டு திடல்கள் புதுப்பொலிவு பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்