8 வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் ஆத்தூரில் ஜி.கே.வாசன் பேட்டி

8 வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ஆத்தூரில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-11-04 22:15 GMT
ஆத்தூர்,
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆத்தூர் நகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சீரான குடிநீர் வினியோகம் செய்ய நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம்-உளுந்தூர்பேட்டை இரண்டு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். பசுமை வழி சாலையான 8 வழிச்சாலை தேவையில்லை. 4 வழிச்சாலையே போதுமானது. எனவே 8 வழிச்சாலைக்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்தது வரவேற்கத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா.கூட்டணி அமைத்து போட்டியிடும். த.மா.கா. தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதன் 5-ம் ஆண்டு விழா அரியலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரட்டும். அதன் பிறகு அது பற்றி பேசலாம்.

இல்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

பின்னர் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாணவி ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்ற ஜி.கே.வாசன் மாணவியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறும் போது, மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மறக்க முடியாதது. இது போன்ற சம்பவம் நடக்க கூடாது. இந்த சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இது போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

அப்போது அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.அன்பழகன், மாநில செயலாளர் வக்கீல் செல்வம், மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் மற்றும் த.மா.கா. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்