மாவட்டத்தில் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-04 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசால் 2018-2019-ம் ஆண்டு 100 சதவீத அரசு மானியத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலா 200 பயனாளிகள் வீதம் 2000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் 50 எண்ணிக்கையில் வழங்கப்பட உள்ளது. அவற்றில் 25 பெட்டை கோழிகுஞ்சுகள் மற்றும் 25 சேவல் குஞ்சுகள் அடங்கும்.

இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயனாளிகளாக சேர தகுதியுடையவர்கள். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகள் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தினால் வழங்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஏற்கனவே இத்துறையினால் செயல்படுத்தப்பட்ட விலையில்லா கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம், கோழி அபிவிருத்தி திட்டங்களில் பயனடைந்து இருக்க கூடாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயனாளிகள் தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்